நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

எழுத்துக்காரத் தெரு

Wednesday, 21 July 2010 6 கருத்துரைகள்
வகைப்பாடு ; கவிதைத் தொகுப்பு


படைப்பு : தஞ்சாவூர்க் கவிராயர்

வெளியீடு : அனன்யா,8/37.B.A.Y.நகர்,புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்.

விலை : ரூ.60/-` கவிதைத் தொகுப்புகள் பெரும்பாலும் கவிஞரின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் அச்சிலேற்றியதாயிருக்கும். வாசகப் பரப்பில் கொள்ளத் தக்கதாயும் தள்ளத் தக்கதாயும் கலந்திருக்கும். தொகுப்பின் மொத்தக் கவிதைகளும் ஆகச் சிறந்ததாய் அமைதல் அரிதினும் அரிதே. அப்படியான அரிய கவிதைத் தொகுப்பாயிருக்கிறது இக் கவிதை நூல்.

புரியாத மொழிநடை, பூடகமான தன்மை எனப் புதுக்கவிதைகளில் பெரும்பாலானவை புதிர்க் கவிதைகளாயிருக்கும் இன்றைய கவிச் சூழலில், தஞ்சாவூர்க் கவிராயர் என்றறியப் படும் தஞ்சாவூர்க் கோபாலியின் ‘எழுத்துக்காரத் தெரு' மாறுபட்ட கட்டமைப்பு.

இவரது கவிதைகள் புரிபட ‘இஸ'ங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை. இலக்கண இலக்கியப் புலமையும் அவசியமில்லை. இரசித்துச் சிரிக்கும்படியான நண்பரின் பேச்சு மனசில் நின்று விடுதல் போலிருக்கிறது இவரது கவிப்பேச்சு. பலகவிதைகள் படிமங்கள், உருவகங்கள், தொன்மச் செய்திகளுடன் உள்ளன.பாடுபொருளுக்காக மண்டையை உடைத்துக் கொள்ளாமல், கண்களில் தென்படுபவை, கடந்து செல்பவை, கைக்கெட்டுபவை கைவசப்பட இயல்பாய் யோசிப்பது இதமாய் இருக்கிறது.

கவிஞனாயிருத்தல் பற்றிய அனுபவக் கவிதைகள் நயமானவை. ரசமானவை.

வாழ்க்கை கொடைதான்... பலருக்கு வாழ்தலே வலியாகிறது. அடுத்தவர் வலி புரியும் போது தன் வலி பெரிதாய் உறைப்பதில்லை(வாழ்தலின் வலி).

தனது கவிதைகளால், உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணமும் ஆடிப்பாடும் ஆனந்தக் கூத்தாக்கி விடுகிறார் வாழ்க்கையை.

தனது எழுத்துக்களுக்குத் தஞ்சைப் ப்ரகாஷின் தூண்டுதல், கனலும் அக்னித் துண்டாய் மனசின் அடியாழத்தில் இன்னுமிருப்பதாய் நெகிழ்வுடன் குறிக்கிறார் தன் முன்னுரையில்!

சிற்பமோ, கவிதையோ, ஓவியமோ... வாசிப்பதற்கானவையல்ல; வாழ்வதற்கானவை. நல்ல கவிதையின் வாசமென்பது குழந்தை மாதிரி... எப்போதும் வாரியெடுத்து உச்சி மோந்து கொண்டிருக்கலாமென இவர் கூறுவதை இத்தொகுப்புக்கு அணியாக்கலாம்.

ஆறமறுக்கும் புண்ணிலிருந்து

ரத்தமும் சீழும் வழிவதை

நிறுத்தும் வைத்தியமாகவும்

தொண்டையில் சிக்கிய

மீன் முள் வாழ்வை

விழுங்குவதற்கான

சோற்றுருண்டையாகவும்

ஆகியிருக்கின்றன இவரது கவிதைகள்.

தனது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான அப்பா பற்றிய ஒன்பது கவிதைகளும், அவற்றுக்கு இணையான அம்மா பற்றிய ஒரு கவிதையும் உணர்வுகளின் உச்சம். அம்மா அப்பா போல் எந்தக் கடவுள் நிகழ்த்த முடியும் அதிசய-அற்புதங்களை?! முதியோர் இல்லங்களை நிறைப்பவர்களின் குழந்தைகள் கூட ஏதேனும் ஓர் தருணத்தில் பெற்றோரின் கடவுள் தன்மையை உணரவும், உருகவும் வாய்ப்பிருக்கிறதே...! தாயும் தந்தையும் தான் தெய்வம் என்றிருந்தால் மதங்களின் பெயரால் மனிதருக்கு அழிவேது?

இவரது இதிகாச நையாண்டிக் கவிதை ஒன்றில் அயோத்தி கான்க்ரீட் நகராகிறது. நீலச் சாயம் பூசிய ராமர் வயிற்றுப் பாட்டுக்கு கையேந்தும் அவலத்தைத் தணிக்க பீடி பற்றவைத்துக் கொள்கிறார். வாலைத் தூக்கிக் கொண்டு முனிசிபாலிட்டி சாக்கடை தாண்டும் அனுமன், வயிற்றில் எரியும் லங்கா தகனம்(பசித் தீ) தணிக்கத் தேவையாகிறது ஒரு கோப்பைத் தேநீர். சீதையைக் காணோம். இருட்டுவதற்குள் வந்து விடுவாளென சமாதானமாகிறான் ராமன். இதிகாச வேடமிட்டு யாசித்து உயிர் வளர்க்கும் மக்களின் அவலத்தை, ஆவேசத்தை சிரித்தபடி, கிண்டலடித்தபடி அனாயசமாக கவிதையாக்க முடிந்திருக்கிறது இவரால்.

‘தெருவோரக் குழந்தைகள்

அனைத்தையும்

மத்திய மாநில அமைச்சர்கள்

தத்தெடுத்து

அரசு பங்களாக்களிலும்

விருந்தினர் மாளிகையிலும்

தங்க வைக்க வேண்டும்...'

--------

‘எத்தனை ரத்தக் கறைகள் பார்த்தாயா

எமது வீதிகளில்

பெரும்பாலும்

குழந்தைகள், அபலைகள்

அப்பாவி மனிதர்களுடையவை...'

--------

‘ ‘பட்டினியாலும் வலியாலும்

தவிக்கும் உலகத்து ஜீவராசிகள்

எல்லாவற்றையும்

மடியேந்திப் பசி தீர்க்கும்

ஆவேசத்தோடு பொங்குகிறேன் பாற்கடலாக...'

--------

புலன்களால் நுகரப்படும், புத்தியால் அறியப்படும் ரசனைமிகு கவிதைகளினூடே அவரது சமூக அக்கறையும் இவ்வாறாகக் காணக் கிடக்கிறது.

‘தஞ்சாவூர்க் கவிராயர்' என்றொரு காலாண்டிதழ் நடத்திவருகிறார். தனது கவிதைகள் நிரம்பியதாய்.

எதையும் கவிதையாக்கும் நுட்பம் பெற்ற இவர், தனது தொகுப்பில் ஒரு கவிதையில் கூறியது போன்று, கவிதைக் கடை துவங்கி, மலிவுப் பதிப்பில் உலகில் ஒருவர் விடாமல் தன் கவிதைகளைக் கொண்டு சேர்ப்பார் என்ற நம்பிக்கை துளிர்க்கிறது நமக்கு.

மகிழ்தலும் மகிழ்வித்தலும்

Thursday, 15 July 2010 9 கருத்துரைகள்
பண்டிகைகளும் கொண்டாட்டங்களும், விருந்துகளும் கேளிக்கைகளும் நம் சலிப்பூட்டும் தினசரி நடவடிக்கைகளின் மாற்றாக நம்மிடையே அமைந்துள்ளன.

மகிழ்தலும் மகிழ்வித்தலுமே கொண்டாட்டங்களின் அடிப்படை. சமீப காலமாக புத்தாண்டு, தீபாவளி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தேர்தலில் வெற்றியடைந்த கட்சிக் கொண்டாட்டங்கள் போல மனம் போனவாறு ஆடம்பர ஆர்பாட்டங்களோடு, அடுத்தவர்களின் அவஸ்தைகளை பொருட்படுத்தாது, யாருக்கும் எந்தப் பயனுமின்றி, வெற்றுப் பொழுது போக்காக விரய செலவாக கொண்டாடப்படுகின்றன.

இந்தப் போக்கைக் கைவிட்டு, நம்மிலும் எளியோர் வறியோர்க்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதாய் நம் கொண்டாட்டங்களின் செலவுதிட்டத்தை அமைத்துக் கொண்டால் நன்று.

உபதேசிக்கும் முன் உதாரணமாய் வாழ்தல் அவசியம் அல்லவா... எங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்தநாள். திருமண நாள், நினைவு நாள் போன்ற நாட்களில் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப் படும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கும், உடல் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கும் (மெய்ப்புல அறைகூவலர்) நேரில் சென்று, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய எங்கள் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப் பட்ட தொகையில் பெரும்பகுதியை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.(எனவே இப்பதிவை இட அருகதை இருப்பதாகக் கொள்ளலாம்)

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த எங்கள் மகள், உற்சாகப் படுத்தலுக்காக ஏதேனும் வாங்கித் தரும் உத்தேசத்தில் என்ன வேண்டுமெனக் கேட்க, 3 மாதத்துக்கு முன் சென்ற அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவும், அவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் ஏதேனும் வாங்கித் தந்தால் போதும் என்று சொன்ன போது ஈன்ற பொழுதினும் பெரு உவப்பாய் இருந்தது உண்மை. பதினோராம் வகுப்புக்காக பள்ளி திறக்கும் முன் அப்பாவும் பெண்ணுமாக கடலூர் சென்று, விடுதியிலிருந்த 25 குழந்தைகளுக்கு மதிய உணவும், திறனறி ஊக்குவிப்பாக படம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ வேண்டிய உபகரணங்களும் வழங்கி, நாள் முழுதும் அவர்களுடன் பொழுதைக் கழித்து உற்சாகம் நிரம்ப வீடு திரும்பினர்.

உடல் மன உளைச்சல் நீங்க இறைவனை வேண்டி பிராத்தனை செலுத்துவது காலங்காலமாக நம்மிடையே நிலவிவரும் பழக்கம். என் மாமியார் தன் கண்பார்வைக் குறைவினை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது செலுத்திய பிரார்த்தனை என்ன தெரியுமா? பார்வையற்ற, ஊனமுற்ற குழந்தைகள் பள்ளிகளுக்கு தன் சேமிப்பிலிருந்து பெருந்தொகையை நன்கொடையாக அளித்தது தான்! மன நிறைவும் தெய்வ கடாட்சமும் பரிபூரணமாகக் கிடைத்தது!

மாதந்தோறும் நம் உறவினர், நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் அல்லது நம் குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் வந்து கொண்டுதான் உள்ளன.நேரில் சென்று வாழ்த்தவும் பரிசளிக்கவும் எப்போதும் முடியும் என்று சொல்ல முடியாது. ஒரு போன் செய்து குடும்பத்தோடு அரை மணி(குறைந்த பட்சம்) அரட்டையுடன் முடிப்பதும் உண்டு. இதற்கு மாற்றாய் அவரவர்க்கு அருகாமையிலுள்ள தொண்டு நிறுவனங்களுக்கு இயன்றதொகை அளித்து மகிழலாம். அதற்கும் நேரமற்றவர்கள் அன்றைய பொழுதில் எதிர்ப்படும் எளியோர்க்கோ வயோதிகருக்கோ தன்னாலியன்ற உதவிகளை செய்து அதன் பலனை கொண்டாட்டக்காரருக்கு அர்ப்பணிக்கலாம். இந்த ஜுலை மாதம் எங்கள் மகளோடு, ஜீலையில் பிறந்த உறவுக் குழந்தைகள் பிறந்த நாட்களை முன்னிட்டு இத்தகைய பள்ளிக்குச் சென்று, குழந்தைகளுடன் கொண்டாடினோம். பட்டும் ஆபரணமும் பட்டாசும் ஊர்சுற்றலும் தாண்டிய பிரம்மாண்டமான உற்சாகத்தை, ஊக்கத்தை அளிக்கவல்லதாய் இருந்தது அந்நிகழ்வு.நீத்தார் நினைவு

Tuesday, 13 July 2010 5 கருத்துரைகள்

கைத்தடி சின்ன மகனுக்கு
மூத்த பெண்ணுக்கு மூக்குக் கண்ணாடி
காவியேறி நைந்த வேட்டி ரெண்டும் கேட்பாரற்று
மேல் துண்டு சுருணையானது அடுக்களையில்
போகவர போடும் டெரிலின் சட்டை ரெண்டும்
பெரிய மனசோடு சின்ன தாத்தாவுக்கு
இவ்வளவும் அடக்கி இத்தனை காலமும்
கைத்தடியில் மாட்டிவந்த மஞ்சள் பை
காதறுந்து குப்பைத் தொட்டியில்
வருடங்கள் தேய்த்துக் கடந்த செருப்பும்
தொலைந்தது ஈமச் சடங்கன்று
ஆயிற்று-
தாத்தா செத்துப் பத்தே நாட்கள்!

தானம்

Monday, 12 July 2010 4 கருத்துரைகள்


குச்சி வீடும் காரை வீடும்
மச்சு வீடும் எதிரொலித்தது
நல்ல காலம் பொறக்குது!

குறி சொன்ன வாயும்
குடுகுடுப்பை ஆட்டிய கையும்
அலுத்துப் போன கோடங்கியொருவன்
தளர்வாய்ச் சாய்ந்தான்
ஊர்ப் பொது மரத்தடியில்...

அன்றைய வரும்படி
அரை வயிறு உணவும்
ஐந்தேகால் ரூபாயும் தான்.
இல்லத்தரசிகளின் பெரிய மனசால்
நிரம்பிவழிந்தது தோல்பை
பழந்துணிகளால்...

போடவும் மூடவும் துணிகளற்று
கந்தல் துணியில் விரைத்து அலறும்
தன் பிள்ளைகள் நினைவோடு
எடுத்து உதறிப் பார்க்கிறான்
ஒவ்வொன்றாக...

சாயம் போன
பொத்தான் அறுந்த
காலர் நைந்த
சுருங்கிக் கிழிந்த
துணிகளில் கண்டேன்
மனிதம் சுருங்கி
மங்கிப் போனதை...!

எரியூட்டிய இரவு

Sunday, 11 July 2010 9 கருத்துரைகள்

வீடு முழுக்க சிதறிக் கிடந்த
உறவுக் கூட்டம்.
சொல்லவும் கேட்கவும்
தத்தம் செய்திகளோடு.

யார் யாரோ வந்து என்னென்னவோ பேச்சு...
எனக்கோ
கழுவி விட்ட வீட்டின் தரையாய்
வெறிச் என மனசு.

காதுகளின் வழி புத்தியில் தங்காத குரல்கள்
வீட்டின்
கட்புலன் மீறிய சூனியத்தை நிரப்பவியலாமல்
திறந்து கிடக்கும் வீடு வழியே
வீதி நிறைத்தது.

பேசியே ஆக வேண்டிய கட்டாயம்...
அலை-தொலை பேசிகளின்
ஓயாத விசாரிப்புக்கு.

எல்லோருக்கும் பசி.
நச்சரித்துத் திணித்தனர் எனக்கும்.
நெஞ்சடைத்தது.
மரத்திருந்த நாக்கில் ருசியேயில்லை
குரல்வளை இறுக மூடி, கண்களில் மழை.

சளசளப்பு அருகி
உறக்கப் பிடியில் ஒவ்வொருவராய்...

கனவுகளற்ற தூக்கத்துக்குக்
கடவுளை வேண்டித் திருநீறிட்டு
நான் தூங்கும் வரை தலைவருடும்
அம்மாவின் விரல்களுக்காய்
காத்திருக்கும் எனதுறக்கம்...

கனவில் வருவதற்காய்
காத்திருக்கிறாளம்மா மயானத்தில்...

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar