நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பருவம் தப்பிய மழை

Friday, 27 August 2010 9 கருத்துரைகள்

தட்டு முட்டுச் சாமானெல்லாம்

சொட்டும் மழை தேக்கி நிற்க
கொட்டும் விடா மழையால்
கூரை நைந்து கீழே விழ

ஒட்டுத்துணியும் விடாமல்
ஈரம் தேக்கிப் பூஞ்சை பூக்க
ஈர விறகால் புகை பெருக்கி
உலையரிசி வேகாதிருக்க

ஆடு மாடு கோழியெல்லாம்
அடைமழையால் விரைத்துக் கிடக்க
வயக்காட்டில் பயிர் அழுகி
குடியானவன் வயிரெரிக்க

வெடவெடக்கும் குளிர் குறைக்க
ஒரு டீ குடிக்கவும் சில்லறையற்ற
உழவனுக்கு யாரால் வரும்
நல்ல காலம் ?

மழை

Friday, 20 August 2010 6 கருத்துரைகள்

வாசலில் வந்த தூறல்
என்னை வா வா என்றது...

நீட்டிய கையில்
பொட்டென ஒரு துளி
படியிறங்கிய போது
கழுத்தில் கையில்...
சிலிர்த்துச் சிரித்தேன் மகிழ்வாய்...

தலையுயர்த்தி வாய் திறக்க
தாகமற்ற தொண்டையில்
துளிகளின் பரவசம்

வலுத்த மழையில்
நனைந்தன துணிகள்

கும்மாளமாய்க்
குதித்து ஆடினேன்
கப்பல் விடக் காகிதம் தேடினேன்

அடுப்படியிலிருந்து
அவசரமாய் வந்து
உலர்த்திய துணிகளை
உருவிய அம்மா

ஓட்டமாய் வந்து
போட்டாள் முதுகில் பலமாக

கப்பல் விடும் ஆசை கனவாகிட
விசும்பலில் வலி கரைத்தேன்

தலை துவட்டித் துணி மாற்றியபடி
விரல் பதிந்த என் முதுகு தடவி
அழுகிறாள் அம்மா மழை போல!

தாய்மை நனைந்த தருணங்கள்

Saturday, 14 August 2010 4 கருத்துரைகள்

பேருந்து வேகத்தில்
தூக்கத்தில் சாமியாடும் தோழனை
ஆதரவாய்த் தோளில் சாய்த்துக்கொள்ளும்
நண்பனின் பரிவில்...

மிதிவண்டி சக்கரத்தில்
முந்தானை மாட்டி
தடுமாறி விழுந்த பெண்ணுக்கு
பாதையோர குடிசைவாசி
மாற்றுத் துணி தந்து
துணிவூட்டி வீடனுப்பும்
பெருந்தன்மையில்...

பிதுங்கும் கூட்டத்தில்
சிணுங்கும் குழந்தையோடு
கால்மாற்றித் தவிக்கும் சபிரயாணிக்கு
எழுந்து இடமளிக்கும்
கிராமத்து ஆசாமிகளின்
இரக்க மனசில்...

தெருமுனையில் கிழிந்த பாயில்
கிடந்துழலும் தொழுநோயாளிக்கு
தன் சோற்றைப் பகிர்தளிக்கும்
சக பிச்சையாளனின் பாசத்தில்...

அம்மாவின் இடத்தை இட்டு நிரப்ப
எல்லோரும் அம்மாவாகின்ற
தாய்மை தெறிக்கும் தருணங்கள் உன்னதம்!

கடவுளும் காருண்யமும்

Sunday, 1 August 2010 9 கருத்துரைகள்

எரியும் ஊதுபத்திப் புகையில்

நெளிகிறது
பார்வையற்ற விற்பனையாளனின்
தீனக்குரல்

சூம்பிய ஒற்றைக் கையில்
மாட்டவியலா சூடத் தட்டை
கழுத்தில் மாட்டி விற்றுப் பிழைக்கும்
சிறுமியின் தன்மானத்தில்
ஒளிர்ந்து மினுக்குகிறது
தீப ஆராதனை

வெளியே பலருக்கு
உழைப்பே தெய்வம்...
உட்கார்ந்த வாக்கில்
உண்டி நிரப்பும் பூசாரிக்குப்
பிழைப்பே தெய்வம்!

உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar